About the Author

பா. ராகவன் (37)

படித்தது இயந்திரவியல். இதழியலில் கவனம் திருப்பியது தற்செயலல்ல. விருப்பமும் விழைவும் அதுவாகவே இருந்தபடியால்.

1989ல் சிறுகதைகள் எழுதத் தொடங்கி அமுதசுரபி, தாய், கணையாழி இதழ்களில் ஆரம்பப் பிரசுரங்கள் பார்த்தபிறகு கல்கியில் முதல் சிறுகதை 1991ல் பிரசுரமானது. 1992 டிசம்பரில் இருந்து தொடர்ந்து எழுதக் கல்கியே களமானது. விரைவில் அங்கு ஆசிரியர் குழுவில் இணைந்து, எட்டாண்டுகள் இதழியல் பயிற்சி. முதல் விமரிசன முயற்சி, முதல் கட்டுரை முயற்சி, முதல் தொடர்கதை முயற்சி, முதல் பேட்டிகள், முதல் அரசியல் கட்டுரைகள் என அனைத்தும் கல்கியில்.

2000ம் ஆண்டு கல்கியில் இருந்து விலகி குமுதம். ஓராண்டு அங்கும் துணையாசிரியராகப் பணியாற்றியபிறகு ‘குமுதம் ஜங்ஷன்’ இதழின் பொறுப்பாசிரியர் பணி. தமிழின் முக்கியமான ‘மிடில் மேகஸின்’ என்று ஜங்ஷன் பரவலாகப் பாராட்டப்பெற்றது.

2003ல் பத்திரிகை உலகிலிருந்து விலகி பதிப்புத்துறை முயற்சிகள் ஆரம்பம். அரைகுறை முயற்சியாக ‘சபரி பப்ளிகேஷன்ஸ்’ சிசு மரணம் அடைய, 2004ல் பத்ரி சேஷாத்ரியுடன் இணைந்து நியூ ஹொரைஸன் மீடியா மூலம் ‘கிழக்கு பதிப்பக’த்தைத் தொடங்கியது முக்கியத் திருப்பம்.

நான்கு ஆண்டுகளில் முன்னூறு புத்தகங்கள். கிழக்கு தவிர நலம், வரம், ப்ராடிஜி, கிழக்கு - வரம் ஆடியோ புத்தகங்கள் என்று நியூ ஹொரைஸன் மீடியாவின் தமிழ்ப் பதிப்புகள் பல அடுத்தடுத்து உதிக்க, தலைமை ஆசிரியராகத் தற்சமயம் வசிப்பதும் வாழ்வதும் இங்கே.
2003ம் ஆண்டு முதல் சர்வதேச அரசியல் நிலவரங்களை கவனித்து எழுதத் தொடங்கி, அது தமிழ் வாசகர்களிடையே நல்ல கவனிப்பைப் பெற்றதை அடுத்து குமுதத்தில் பாகிஸ்தான் அரசியல் வரலாறும், குமுதம் ரிப்போர்ட்டரில் அமெரிக்க அரசியல் வரலாறும் தொடர்களாக வெளியாயின. இத்தொடர்களுக்குக் கிடைத்த வரவேற்பு, தமிழ் வாசக உலகின் ஆர்வங்கள் மற்றும் தரம் பற்றி ஊடகங்கள் கொண்டிருந்த சில பொய்யான கணிப்புகளைத் தகர்த்தன. கனமான விஷயங்களை எளிமையாக எழுதும்போது வரவேற்று வாசிக்க ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை இத்தொடர்களும் இதனைத் தொடர்ந்து வெளியான ‘நிலமெல்லாம் ரத்தம்’ தொடரும் நிரூபித்தன.

ரிப்போர்ட்டரில் இருநூறு இதழ்களாகத் தொடர்ந்து வெளியான  ‘மாயவலை’, முதல் முறையாகத் தமிழ் வாசகர்களுக்கு சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களைக் குறித்த விரிவான, நேர்மையான அறிமுகத்தைத் தந்ததொரு படைப்பு.

அரசியல் வரலாறுகளுக்காகவும் தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஆய்வுகளுக்காகவுமே அதிகம் வாசிக்கப்பட்டாலும் எழுதிய சில நாவல்கள்தாம் விருதுகள் பெற்றுள்ளன.

அலகிலா விளையாட்டுக்கு இலக்கியப்பீடம் விருது. மெல்லினத்துக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது.

2004ம் ஆண்டு பாரதிய பாஷா பரிஷத் விருது.

இராக்: ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் நூலுக்கு 2008ம் ஆண்டுக்கான கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது

இந்தியாவின் பிரபலமான இளம் எழுத்தாளர்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் அடையாளம் கண்டு அறிமுகப்படுத்திய (2006) பத்து பேரில் ஒருவன்.

இப்போதைய செயல்பாடுகளைப் பற்றிய விவரங்கள் இங்கே.